பெல்கிரேட் நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பஜ்ரங் பூனியா 65 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும், வினேஷ் போகத் மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். இதில் பஜ்ரங் பூனியா கடந்த 2013 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெண்கல பதக்கமும், கடந்த 2018-ம் ஆண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். இதேபோன்று வினேஷ் ஏற்கனவே ஒரு முறை பதக்கம் வென்றிருந்த நிலையில், மற்றொரு முறை வெண்கல பதக்கம் வென்றிருக்கிறார்.
இவர்கள் 2 பேருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட நம்முடைய மல்யுத்த வீரர்கள் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர். வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். வினேஷ் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இதேபோன்று பஜ்ரங் 4-வது பதக்கம் வென்றுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் சிங் தாக்கூரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.