மலக்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 18 நோயாளிகளுக்குவழங்கப்பட்ட மருந்து அதிசயத்தக்க வகையில் பலனளித்து உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் புற்று நோய் வரலாற்றில் முதல் முறையாக இது சாத்தியமாக்க பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஸ்லோன் கேட்டெரிங் நினைவு புற்றுநோய் மையத்தை சேர்ந்த மருத்துவர் லூயிஸ் ஏ. டயஸ் கூறியுள்ளார்.
கீமோ தெரபி மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றால் மலம், சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை புற்றுநோயாளிகள் சந்திக்கிறார்கள். இதனைப் போல பல இன்னல்களை சந்தித்து வந்த 18 நோயாளிகளுக்கு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து ஆறு மாதங்களாக டோஸ்டார்லிமப் என்ற மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்தனர். அதில் இந்த மருந்தை சாப்பிட்ட 18 நோயாளிகளுக்கும் புற்றுநோயின் அறிகுறிகள் இல்லாமல் பூரணமாக குணம் அடைந்துள்ளனர்.
அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் இவர்கள் உடல்நிலை முழுமையாக சரியாகி உள்ளது. இந்த மருந்து தற்போது மருத்துவ ஆய்வகங்களில் நோயெதிர்ப்பு மாற்று மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் மிக குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மலக்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஒரே கட்டத்தில் இருந்த இந்த 18 நோயாளிகளும் பூரண குணம் அடைந்து இருப்பது பெரும் நம்பிக்கை அளிக்கிறது. பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட புற்று நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்து இருப்பது என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று. உலக வரலாற்றில் இது முதன்முறை என்பதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இது பெரும் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.