வனவிலங்குகளுக்கு இடையூறு அளிக்க கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த இடத்தில் இதமான காலநிலையும், லேசான மழை பெய்வதால் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோரத்தில் புற்கள் பசுமையாக காணப்படுகிறது. இதனால் மான்கள் மற்றும் காட்டெருமைகள் சாலையின் இருபுறத்திலும் இருக்கும் புற்களையும் மேய்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்த்ததும் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் சிலர் ஒலி எழுப்பி வனவிலங்குகளுக்கு இடையூறு செய்கின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும். மேலும் வனவிலங்குகளுக்கு தின்பண்டங்களை கொடுக்கவோ, அதனை துன்புறுத்தவோ கூடாது. இதனை மீறி நடந்து கொண்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.