தூங்கும் பெண்களிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் இருக்கும் வீடுகளின் ஜன்னலோரம் படுத்து தூங்கும் பெண்களின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து செல்கிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வேளச்சேரி காவல்துறையினர் பெண்களிடம் இருந்து நகையை பறித்து செல்லும் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் பெண்களிடம் இருந்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் பதுங்கி இருந்த திருலோகசந்தர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் ஜன்னலோரம் தூங்கும் பெண்களிடமிருந்து திருலோகசந்தர் தங்க சங்கிலியை பறித்து சென்றது உறுதியானது.
அதன்பிறகு ஆந்திராவில் இருக்கும் ஒரு அடகு கடையில் அதனை விற்று திருலோகச்சந்தர் தனது வாழ்க்கையை உல்லாசமாக கழித்து வந்தது தெரியவந்துள்ளது. இவர் மீது வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திற்காக அடகு கடை உரிமையாளரான உகமாராம் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்த 15 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்துள்ளனர்.