இலங்கை நாட்டின் தென் பகுதியிலுள்ள ஹம்பன் தொட்டா ஆழ்கடல் துறைமுகத்திற்கு சீனாவின் யுவான் வாங்-5 என்ற போர்க் கப்பல் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து அதனை இலங்கை அரசும் உறுதிசெய்தது. வரும் 11-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை ஹம்பன்தொட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படும் இந்தகப்பல் செயற்கைக்கோள் தகவல்களை சேகரிப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று சீனா தெரிவித்தது. எனினும் இலங்கை வரும் சீனகப்பல் ஒரு உளவு கப்பல் எனவும் அதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் இலங்கை அரசிடம் இந்தியா நேரடியாக கவலையை வெளிப்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்து, ஹம்பன் தொட்டா துறைமுகம் வரும் யுவான் வாங்-5 கப்பலின் பயணத்தை ரத்து செய்யும்படி சீனாவுக்கு இலங்கை அரசானது நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கொழும்புவிலுள்ள சீனத்தூதரகம் இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளின் அவசர ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆராய்ச்சி கப்பல் வருகை தொடர்பாக சீன தூதர் குய் ஜென்ஹாங், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பூட்டிய அறைக்குள் ஆலோசனை நடத்தியதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இலங்கை அதிபர் அலுவலகமானது இதனை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.