பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊனைமோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவில் குப்பன்-அம்பிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அம்பிகா தனது வீட்டின் முன்பு அமைந்துள்ள சாலையில் உளுந்தை காய வைத்து விட்டு தனது உறவினர்களிடம் பேசிக்கொண்டு நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அம்பிகாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இதனையடுத்து அம்பிகா தனது உறவினரிடம் தண்ணீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர்கள் அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்பிகா சங்கிலியை கெட்டியாக பிடித்து கொண்டார். ஆனால் அந்த வாலிபர்கள் 5 பவுன் மதிப்பிலான சங்கிலியை அறுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அம்பிகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகையை பறித்து சென்ற வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.