Categories
மாநில செய்திகள்

உள்துறை அமைச்சரே! “இது இந்தியா தான், ஹிந்தியா அல்ல” இந்தி மொழி பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி….!!!!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹிந்தி மொழி தொடர்பான பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி திவஸ் என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்வதற்கு அனைவரும் ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவற்றை நம்முடைய உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழியில் நடக்க உறுதிமொழி ஏற்போம் எனவும் கூறினார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு மொழிக்குரிய நாளில் அந்த மொழியை பற்றி சிறப்பாக எடுத்துரைப்பது இயல்பானது. ஆனால் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் கற்றுக் கொள்வதற்கு ஹிந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்று கூறுவது பல மொழிகள் பேசும் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டிற்கு நேர் எதிரானது.

இந்தி மொழியில் இந்திய நாட்டின் வரலாறும் பண்பாடும் புதைந்திருக்கவில்லை. ஏனெனில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே தமிழ் மொழியும், திராவிட மொழி குடும்பமும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவி கிடந்ததை வரலாற்று ஆசிரியர்கள் நிரூபித்துள்ளனர். இதன் அடிப்படையில் தான் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரும் தன்னுடைய ஆய்வு முடிவுகளை பதிவு செய்திருக்கிறார். இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆசிரியர்களின் முடிவு. அப்போது தான் உண்மையான கலாச்சாரத்தையும் வரலாற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியையும் மற்ற மொழிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தி மொழி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று கூறுவது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும்.

இப்படிப்பட்ட ஆதிக்க உணர்வை எதிர்த்து தமிழ் மொழிக்காக தீக்குளித்து தங்கள் இன்னுயிரை நீத்த அன்னை தமிழுக்கு ஈந்த தியாக வரலாற்றைக் கொண்டது தான் எங்கள் தமிழ்நாடு. இந்தியாவில் அலுவல் மொழியாக ஹிந்தியும், இணை அலுவல் மொழியாக ஆங்கிலமும் இருக்கிறது. உள்துறை அமைச்சர் இந்தி மொழியை உயர்த்தி பேசுவதற்காக மற்ற மொழிகளையும் கூட்டாளியாக சேர்த்துக் கொள்கிறார். இந்தி மொழி மாநிலங்கள் என்று சொல்லப்படும் சில பகுதிகளில் அவதி, சந்தாளி, போஜ்பூரி, மைதிலி உள்பட பல மொழிகள் இந்தி மொழியின் காரணமாக அழிவின் விளிம்பில் இருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர். இந்த மொழிகளை காப்பதற்காக உள்ளூர் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தி மொழியின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் உட்பட பல்வேறு மொழிகளை காப்பதற்காக போடப்பட்ட வேலிதான் இணை அலுவல் மொழியான ஆங்கிலம்.

இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவர்கலால் நேரு உறுதிமொழியின் காரணமாகத்தான் இன்றளவும் இணை அலுவல் மொழியான ஆங்கிலம் வேலியாக இருக்கிறது. இதனால்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கண இலக்கிய வளத்துடன் செழித்து நிற்கும் செம்மொழியான தமிழ் மொழியை யாராலும் மேய முடியவில்லை. மத்திய அரசுக்கு தமிழ் உட்பட உள்ளூர் மொழிகளின் மீது அக்கறை இருக்குமானால் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியைப் போன்ற தமிழ் மற்றும் மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் சமமான அளவு நிதியை ஒதுக்குங்கள். மத்திய அரசானது தேசிய கல்விக் கொள்கை என்ற திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை திணிப்பதில் தான் குறிக்கோளாக இருக்கிறது.

இது அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் இந்தியா. அதை ஹிந்தியா என்று கூறி வேறுபடுத்த வேண்டாம். உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் இந்தி மொழிக்கு இணையாக அலுவல் மொழியாக விரைவில் அறிவியுங்கள். தமிழ் உட்பட மற்றும் மொழிகளை இந்திக்கு இணையாக அலுவல் மொழியாக அறிவித்து அனைத்தையும் ஒன்று படுத்தி இந்தி நாள் விழா என்பதற்கு பதிலாக இந்திய மொழிகள் நாள் என கொண்டாடி கலாச்சாரத்தையும், வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |