சட்ட விரோதமான முறையில் தங்கம் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக சங்க இலாக்கா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த பெண்மணிகள் தங்கக் கடத்தலில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாக்கா அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அப்போது இலங்கையைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேரிடம் சோதனை நடத்தப்பட்ட போது உள்ளாடைகளில் தங்க பசைகள், தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதேபோன்று கத்தார் நாட்டில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பயணியிடமும் தங்கப் பசைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் பிறகு விமான நிலையத்தில் உள்ள குப்பை தொட்டிகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஒரு குப்பை தொட்டியில் இருந்த பார்சனில் தங்க பசைகள் இருந்துள்ளது. மேலும் விமான நிலையத்தில் நடந்த தீவிர சோதனையில் ரூ. 3 கோடி மதிப்புடைய 6.2 கிலோ மதிப்பிலான தங்க கட்டிகள், தங்க நகைகள் மற்றும் தங்கப் பசைகள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.