துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு 2 கிலோ 880 கிராம் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த மூன்றுபேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
துபாயிலிருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்கள் வந்து இறங்கின. அந்த விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தி வருவதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.தகவலின்பேரில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பேர் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் என மூன்று பயணிகள் மீது சந்தேகமடைந்த போலிஸார் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.
அதன் பிறகு மூன்று பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது அவர்கள் 3 பேரும் தங்களின் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டறிந்தனர். அவர்களிடமிருந்து ஒரு கோடியே 32 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 880 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் தொடர்புடைய மூன்று பேரையும் அவர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.