தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி (நாளை) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பொது கூட்டங்கள் மற்றும் பிரசார நிகழ்வுகள் அனைத்தும் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அதற்கு தகுந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்தல் நியாயமான முறையில் வெளிப்படையாகவும், அமைதியான முறையிலும் நடைபெற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட 1,343 நிலைக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் தேர்தல் தொடர்பான பிரச்சனைகள் நிலவும் பகுதிகளுக்கு உடனடியாக விரைந்து சென்று தீர்வு காணும் வகையில் 846 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர 455 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் தாலுக்கா மற்றும் ஆயுதப் படையை சேர்ந்த 17,788 காவலர்கள், 71,074 ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சிறப்பு படையை சேர்ந்த 9,020 காவலர்கள் உட்பட மொத்தம் 97,882 காவல் அதிகாரிகள் உட்பட காவலர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையை பொருத்தவரையில் மாநகர போலீசார், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதில் தேர்தல் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 1,198 வாக்குச்சாவடி மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள், லாட்ஜ்கள் மற்றும் ரிசார்ட்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வெளியாட்களை அப்புறப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்தல் பறக்கும் படையினரும் பணம் பட்டுவாடாவை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.