தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் பேரூராட்சி தலைவர், நகராட்சி மன்ற தலைவர், மாநகராட்சி மேயர் மற்றும் இவைகளின் துணைத் தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் பற்றி ஆய்வு செய்து வரும் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பழனித்துரை “மேயர் பதவி என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி. இந்தப் பதவிக்கு நடக்கும் தேர்தல் நேரடி வாக்கு சேகரிப்பு மூலம் நடக்க வேண்டியது. ஆனால் இது மறைமுகமான தேர்தலாக நடக்க உள்ளது. இது நியாயமாக நடக்கிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நகராட்சி மன்ற தலைவர்களோ அல்லது மேயர்களோ வார்டு உறுப்பினர்களின் கைப்பாவையாக மாறி செயல்படக் கூடாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் நினைவில்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.