தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு மட்டுமே நடக்க உள்ளது.
இந்த தேர்தலின் மூலமாக 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் 490 பேரூராட்சிகளில் 7621 வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் 21 மாநகராட்சிகளில் 1374 வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் இருப்பதால் மொத்தம் 12,838 உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர் .
இந்தத் தேர்தல் முடிவுற்ற பிறகு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒருவரை மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு போட்டியிட தேர்வு செய்து மறைமுகமாக தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள். அவ்வகையில் 21 மேயர்கள், 138 நகர்மன்ற தலைவர்கள், 490 பேரூராட்சி மன்ற தலைவர்கள், 21 துணை மேயர்கள் 138 நகராட்சி மன்ற துணைத் தலைவர்கள் 490 பேரூராட்சித் மன்ற துணைத் தலைவர்கள் என மொத்தம் 1,298 பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.