முழு ஊரடங்கு காரணமாக கோவில்களில் சுவாமி தரிசனம் மற்றும் திருமணங்களை நடத்த தடை விதிக்கப்பட்டதை அடுத்து கடலூரில் கோவில் வாசலில் திருமணங்கள் நடந்தன.
தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்து இருந்த நிலையில், கோவில்களும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படும் என அறிவித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றது ஆகும்.
இக்கோயிலுக்கு கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். மேலும் தயானந்தர் சுவாமி கோவிலில் பக்தர்கள் திருமணம் நடைபெற வேண்டி அதிக அளவு பிரார்த்தனை செய்து கொள்வதால் முகூர்த்த நாட்களில் குறைந்தது 100 முதல் 300 திருமணம் வரை நடைபெறும்.
தமிழகத்தில் இப்பொழுது கொரோனா அதிகரித்து வருவதால் கோயிலில் திருமணம் நடத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் பல மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு இந்த கோயிலில் திருமணம் நடத்த பத்திரிக்கை அடித்து, உறவினர்களுக்கு அளித்துவிட்டு காத்திருந்த நிலையில், திடீரென்று நேற்று கோயிலுக்குள் அனுமதிக்காததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று ஊழியர்கள் காரணம் கூறியதால், கோயிலின் வாசலில் திருமணங்கள் நடைபெற்றது. இதுவரைக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோயில் வாசலில் நடைபெற்றிருக்கிறது.