தென்கொரியாவில்சென்ற 2012ஆம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக பார்க் கியுன் ஹை தேர்வு செய்யப்பட்டார். இவரின் நெருக்கமான தோழியான சோய் சூன் சில், அதிபரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சாம்சங் உட்பட பெரும் நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்று ஊழலில் ஈடுபட்டார். இச்செயலில் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு நேரடியாக பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அதிபருக்கு எதிராக நாட்டில் பெரியளவில் போராட்டம் வெடித்தது. அதன்பின் கடந்த 2017 ஆம் வருடம் அந்நாட்டு நாடாளுமன்றம் பார்க் கியுன் ஹைவிடம் இருந்து அதிபர் பதவியை பறித்தது.
இதனை தொடர்ந்து பார்க் கியுன் ஹை மீதான ஊழல் வழக்கில் அவருக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. பின் நடைபெற்ற தேர்தலில் மூன் ஜே இன் வெற்றி பெற்று அதிபரானார். இதனிடையில் ஊழல் வழக்கில் கிட்டத்தட்ட 5 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபரான பார்க் கியுன் ஹைவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக கடந்த டிசம்பர் மாதத்தில் அந்நாட்டு அரசு அறிவித்தது. அதன்படி சிறையிலிருந்து விடுதலை பெற்ற பார்க் கியுன் ஹை கடந்த 3 மாதங்களாக ஒரு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.