வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அக்கிரமேசி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனை நயினார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்குமாறும், அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளை பயிரிடுமாரும் வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உணவு தானிய உற்பத்தியை பெருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த பயிற்சி கூட்டத்திற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சைலஸ் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பரமக்குடி உழவர் பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கரமணியன், வேளாண்மை உதவி இயக்குனர் பானு பிரகாஷ், வேளாண் உதவி இயக்குனர் நாகராஜன் உட்பட பல்வேறு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதில் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மானிய முறைகள் குறித்தும் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.