தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கு தயாராவது குறித்து பாஜக மாவட்டத் தலைவர் களுடன் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் குறித்தும் கட்சியின் வளர்ச்சி பணிகள் அடுத்த கட்ட திட்டமிடல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பாஜக கூட்டணிக் கட்சிகள் கைப்பற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் வேறு யாத்திரை என தொடர்ச்சியாக ஓய்வின்றி கட்சிப் பணிகளை அனைவரும் செய்தது போல வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும் அதே வேகத்துடன் அனைவரும் உழைக்க வேண்டும். தொடர்ந்து உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்று அண்ணாமலை நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.