தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம் மற்றும் கெங்குவார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள 182.50 ஏக்கர் அரசு நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டணி அமைத்து, தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம் சார் ஆட்சியர் ரிஷப் நடத்திய விசாரணையில் அம்பலமானது. மேலும் 80 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் பணிபுரிந்த நில அளவையர்கள், வட்டாட்சியர்கள் என 7 பேர் மீது மாவட்ட ஆட்சியர் முரளீதரன் நடவடிக்கை எடுத்தார்
.இதனிடையே இந்த மெகா மோசடி வழக்கை கடந்த ஜனவரி 4ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 5ம் தேதி சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் வழக்கு குறித்து புகார் அளித்த பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப்பிடம் விசாரணை நடத்தி விளக்கம் கேட்டனர். இந்நிலையில் மெகா மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முதல்கட்ட விசாரணையை துவக்கியுள்ளனர். அதன்படி தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார் அதிமுக பெரியகுளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நில அளவையர் பிச்சமணி ஆகியோரிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார்.
மேலும் அன்ன பிரகாசுக்கு மூளையாக செயல்பட்டது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தான் எனவும் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யும் பட்சத்தில் போலீசாருக்கு மிகுந்த பாராட்டு மற்றும் வரவேற்பு கிடைக்கும் என்பதாலும் டிஜிபியின் உத்தரவிற்கு இணங்க பன்னீர்செல்வத்தை நேரடியாக நெருங்க சிபிசிஐடி போலீசார் முடிவெடுத்து விட்டனர் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.