உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற மறுப்பு தெரிவித்த சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 15 வயது சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த நபர் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பெயரில் அதே ஊரில் பழ தோட்டத்தின் பராமரிப்பாளராக பணியாற்றி வந்த ஹரிஸ் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் உறவினர்கள், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரைத் திரும்பப் பெற வேண்டும் என்று சிறுமியின் குடும்பத்தை வற்புறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து நேற்று காலை அந்த நபரின் உறவினர்கள் 5 பேர், சிறுமியின் வீட்டுக்கு சென்று வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால், அவர்கள் கொண்டுவந்த பெட்ரோலை அந்த சிறுமியின் மீது ஊற்றி கொளுத்தி விட்டு சென்றனர். அந்த சம்பவம் நடந்த போது பெற்றோர் வீட்டில் இல்லாததால், சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதன்பிறகு சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.