தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் ஊக்கத்தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பரவல் தற்போது அதிகமாக உள்ளது . உருமாறிய தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவான தொற்று பாதிப்பு எண்ணிக்கை 692 ஆகும். எனினும் உயிரிழப்புகள் எதுவும் கிடையாது.
இந்தியாவில் முதல் தவணை, இரண்டாவது தடவை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை முறையே 80, 90 சதவீதத்தை கடந்தாலும், ஊக்கத்தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஊக்கத்தவணை தடுப்பூசி 386 கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. பணம் செலுத்தி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பலர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் ஊக்கத்தொகை தடுப்பூசியை இலவசமாக கொண்டுவர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் அது வரை காத்திருக்காமல் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் ஊக்கத்தவணை தடுப்பூசியை விரைவில் செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.