ஊக்கமருந்து எதிர்ப்பு விதியை மீறியதற்காக ஜான் கேம்ப்பெல் 4 ஆண்டு தடை விதிக்கப்படுவதாக ஜமைக்கா ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜமைக்கா ஊக்கமருந்து எதிர்ப்பு ஆணையத்தின் (ஜாட்கோ) முடிவின்படி, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜான் கேம்ப்பெல் ஊக்கமருந்து எதிர்ப்பு விதியை மீறியதற்காக 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான் கேம்ப்பெல் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, 3 உறுப்பினர்களைக் கொண்ட சுயேச்சைக் குழு விசாரணை மேற்கொண்டு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் கிங்ஸ்டனில் அவரது வீட்டிலிருந்த போது ஊக்கமருந்து சோதனைக்கு அழைத்தபோது இரத்த மாதிரியை வழங்க மறுத்ததாக அந்த ஆணையத்தின் (ஜாட்கோ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 18 பக்க முடிவை வெளியிட்டுள்ளது 3 பேர் கொண்ட விசாரணைக்குழு.. விளையாட்டு வீரர் கேம்ப்பெல் ஊக்கமருந்து எதிர்ப்பு விதியை மீறினார், அதாவது JADCO விதி 2.3 ஐ மீறினார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “இந்த வழக்கின் சூழ்நிலையில், அவர் 4 ஆண்டுகளுக்கு தகுதியற்றவர்,” என்று அது மேலும் குறிப்பிட்டது, பொருந்தக்கூடிய JADCO விதி 10.3.1ஐ மேற்கோள் காட்டி, நோட்டீஸ் கொடுக்கப்பட்ட இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி முதல் 4 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
29 வயதான கேம்ப்பெல், தனது சர்வதேச வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் புகழ்பெற்ற கிறிஸ் கெய்லுடன் ஒப்பிடுகையில், 2019 இல் மேற்கிந்திய தீவுகளுக்காக அறிமுகமானார். அவர் இதுவரை மேற்கிந்திய தீவுகளுக்காக 20 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 3 வடிவங்களிலும் முறையே டெஸ்ட் 888, ஒருநாள் 248 மற்றும் டி20 11 ரன்கள் எடுத்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெறும் 137 பந்துகளில் 179 ரன்கள் எடுத்தது அவரது சிறந்த இன்னிங்க்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்டீஸ் அணிஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளது. இரண்டு முறை சாம்பியனான விண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றில் நேரடியாக இடம்பிடிக்காததால் அக்டோபர் 17 ஆம் தேதி உலகக்கோப்பையில் தனது முதல் சுற்று போட்டியில் ஹோபார்ட்டில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதனை தொடர்ந்து 19ஆம் தேதி ஜிம்பாப்வே அணியையும், 21ஆம் தேதி அயர்லாந்து அணியையும் எதிர்கொள்கிறது விண்டீஸ் அணி..