சிறுமி இறந்த விவகாரத்தில் மருந்து கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் பவுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதுடைய ஐடா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி ஐடாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் ஆலங்குளம்- துத்திக்குளம் சாலையில் இருக்கும் மனோகரன் என்பவரது மருந்து கடைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு மனோகரனுக்கு சிறுமிக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் ஊசி போட்டதால் தான் சிறுமி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மனோகரன் மருத்துவ படிப்பு படிக்காமல் ஊசி போட்டு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மனோகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.