போதைப்பொருட்கள் விற்பனை செய்த நைஜீரிய வாலிபர் உட்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்
சென்னையில் போதைப்பொருள் தடுப்புக்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் நரேந்திரன் மேற்பார்வையில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப், உதவி கமிஷனராக அகமது ஆகியோர் தலைமையில், பரங்கிமலை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் காவல்துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆலந்தூர் எம். கே. என் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் மறைமுகமாக போதைப்பொருட்கள் விற்று வருவதாக தகவல் வந்தது. இத்தகவலின் அடிப்படையில் அங்கு சென்று காவல்துறையினர் 23 வயதான நந்தகுமார், 24 வயதான திருளாபதி 27 வயதான விஜய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இவ்விசாரணையில் ஆம்பெட்டமைன் என்ற போதை பவுடரை விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த ஆம்பெட்டமைன் என்ற போதை பவுடரை ஊசி மூலமாக உடம்புக்குள் செலுத்தி பயன்படுத்த முடியும்.
இவர்கள் இந்த மருந்தை கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 30 வயதான அருண்பாண்டியன், பெங்களூரில் உள்ள நைஜீரிய நாட்டை சேர்ந்த 27 வயதான அகஸ்டின் ஆகியோரிடம் மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் நைஜீரிய வாலிபர் அகஸ்டின், நந்தகுமார், திருளாபதி, விஜய், அருண் பாண்டியன் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 6 லஞ்சம் மதிப்புள்ள 116 கிராம் போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்