Categories
மாநில செய்திகள்

ஊட்டச்சத்து டெண்டர் இறுதியானது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசு சார்பாக கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாவு, ஆவின் நெய், பேரீச்சம்பழம், இரும்புசத்து டானிக் உட்பட 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதையடுத்து ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசு விடுத்த டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்து பெட்டகங்களிலுள்ள அனைத்து பொருட்களையும் சப்ளை செய்வதற்கான டெண்டரில் விதிமுறைகளை மீறி “அனிதா டெக்ஸ்காட்” எனும் தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட இருப்பதாக அவர் திட்டவட்டமாக கூறினார்.

இவ்வாறு அண்ணாமலையின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் ஊட்டச்சத்து பெட்டக முறைகேடு குறித்து அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆதாரங்களுடன் விளக்கமளித்தார். அத்துடன் விதிமுறைகளின் அடிப்படையில் ஊட்டச்சத்து பெட்டகத்துக்கான டெண்டர் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஊட்டச்சத்து பெட்டகத்துக்கான டெண்டரானது இன்று திறக்கப்பட்டது. அவற்றில் தகுதியின்படி “ஸ்ரீ பாலாஜி சர்ஜிக்கல்ஸ்” எனும் நிறுவனம் ஊட்டச்சத்து பெட்டகத்தில் அடங்கிய 8 பொருட்களை சப்ளை செய்வதற்கான டெண்டரை பெற்றுள்ளது.

ஊட்டச்சத்து பெட்டகத்தை சப்ளை செய்வதற்கான டெண்டரில் “அனிதா டெக்ஸ்காட்” நிறுவனம்தான் தேர்வாகும் என அண்ணாமலை கூறிய சூழ்நிலையில், அதற்கு முரண்பாடாக டெண்டரை இப்போது வேறு நிறுவனம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஆவின் நிறுவனம் நெய்க்கு 12.6 % விலை அதிகரிப்பு கோரியிருந்த சூழ்நிலையில், ஊட்டச்சத்து பெட்டகம் சப்ளை செய்பவரின் விலை கடந்த 2019 ஆம் வருடத்தில் இருந்த விகிதங்களை விட 9.6 % மட்டுமே அதிகரித்துள்ளது. இது வழக்கமான ஆண்டுவிலை அதிகரிப்பை விடவும் குறைவானதாகும்” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கூறினர்.

Categories

Tech |