சுதந்திர தினத்தை முன்னிட்டு 13, 14, 15 ஆம் தேதிகள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாப்பயணிகள் திரண்டனர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். அந்த வகையில் நேற்று ஊட்டி அரசுதாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகையானது அதிகமாக இருந்தது. கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு அவர்கள் ரசித்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர்.
அதன்பின் ஊட்டி படகு இல்லத்தில் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். அத்துடன் படகு இ்ல்ல சாலையில் குதிரைசவாரி சென்று குதூகலம் அடைந்தனர். இதேபோன்று ரோஜாபூங்கா, தொட்ட பெட்டா மலைச் சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டமானது அலைமோதி காணப்பட்டது. இதன் காரணமாக சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் விடுமுறையான 3 தினங்களில் ஊட்டி அரசுதாவரவியல் பூங்காவிற்கு 34 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.