சிவகங்கையில் தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பணியாளர்களுக்கு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அறிவுரையின்படி தமிழ்நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் பிடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலி ஆகிய அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நாளன்று தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் உள்ளிட்ட அமைப்பு சாராத தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும்.
அந்த விடுப்பு நாளுக்கான ஊதியம் பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும், சாதாரண தொழிலாளிகளுக்கு ஒரு நாளைக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையின்படி சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறையை தொழிலாளிகளுக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தொழிலாளர்கள் புகார் அளிப்பதற்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அது சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் சிவகங்கை, காஞ்சிரங்கால் அரிசினிப்பட்டி ரோட்டில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.