ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஆந்திராவில் அரசுத்துறையில் அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர் வரை பணிபுரிந்து வரும் லட்சக்கணக்கானோரின் சம்பளம் விகிதம், ஓய்வூதியர் பங்களிப்பு, அரசு ஊழியர்கள் ஓய்வு வயது பற்றி ஜெகன்மோகன் ரெட்டி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை 23 சதவிகிதமாக உயர்த்தி முதல்-மந்திரி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த ஊதிய உயர்வை அமல்படுத்துவதற்கு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
அவற்றின் ஒருபகுதியாக தலைநகர் அமராவதியில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தின் முடிவில் மாநில அரசின் ஊதிய உயர்வு உத்தரவுக்கு எதிராக வரும் 7-ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவெடுத்துள்ளனர். இதுபற்றி அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் பேசுகையில், இந்த ஊதிய உயர்வு உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நிறுத்தி வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், வரும் 25-ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகள் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் இந்தப் போராட்டத்திற்கு அரசு செவி கொடுக்கவில்லையென்றால் வரும் 5-ஆம் தேதி ஒத்துழையாமை இயக்கமாகவும், அதனைத் தொடர்ந்து 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் மாற்றம் அடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.