பொள்ளாச்சி நகராட்சியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினார்கள்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் சுகாதாரப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் இருக்கின்றது. அதில் சாக்கடையை சுத்தம் செய்தல், குப்பைகளை அள்ளுதல் உட்பட பல பணிகளை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்தப் பணியை ஒப்பந்த அடிப்படையில் 267 பேர் மற்றும் கள பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கடந்த 3-ம் தேதி திடீரென்று வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தினார்கள். அதன்பின் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சப் கலெக்டர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
இதுகுறித்து சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது உங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின் சப் கலெக்டரிடம் மனு தாக்கல் செய்து விட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் பேசியதாவது, பொள்ளாச்சி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் எங்களுக்கு இதுவரை பி.எப்., இ.எஸ்.ஐ பிடித்தம் போக ரூ 450 க்கு பதிலாக 370 மட்டுமே கொடுக்கின்றார்கள்.
கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ 350 க்கு பதிலாக 290 மட்டுமே வழங்குகின்றார்கள். கோர்ட்டு உத்தரவின்படி, குறைந்தபட்ச கூலி நிர்ணய சட்டப்படி தினசரி கூலி ஒரு நாளிற்கு ரூ 650 வழங்க வேண்டும். ஆனால் எந்த கூலியும் வழங்கவில்லை. தூய்மை பணிகள் மேற்கொள்ள போதுமான கருவிகள், சீருடைகள் வழங்கவில்லை. மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்க வேண்டும்.
மேலும் வருகை பதிவேட்டில் முறையாக கையொப்பம் பெறுவதில்லை. இதுதொடர்பாக கேள்வி கேட்டால் சரியான பதில் அளிக்காமல் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். கொரோனாவிற்கு முன் கள பணியாளராக அறிவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.