பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியாவை சந்தித்த அரசு பள்ளி ஆசிரியை கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50,000-ஐ வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊராடங்கும், இரவு நேர ஊரடங்கும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு கணித ஆசிரியராகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தலைமை ஆசிரியராகவும் பணிபுரியும் பைரவி ( 41 ) நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது மகன், மகளுடன் வந்தார்.
அதன்பின் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்த பைரவி ரூ.50,000 கொரோனா நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி ஆசிரியை பைரவியை பாராட்டினார். மேலும் கடந்த வருடம் பைரவி கொரோனா ஊராடங்கின் போது 16 மாணவ, மாணவிகளுக்கு 10-ஆம் வகுப்பு பாடங்களை ஆன்லைனில் கற்பிக்க செல்போன்கள் வாங்கிக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.