நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவிய நாள்முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் ஒரு நிலை ஏற்பட்டு, வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டதால் மிகப்பெரிய வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வருங்காலங்களில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில்தான் ஊரடங்கு ஒருபக்கம் பிறப்பிக்கப்பட்டாலும், பிந்தைய காலங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக முதலமைச்சரும் பல்வேறு மட்டத்தில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி புதிய தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வரும் வகையில் முன்முயற்சிகளை மேற்கொண்டார்
அதன் பலனாக ஊரடங்கு காலத்தில் புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு 18 ஆயிரத்து 236 கோடி மதிப்பிலான முதலீடுகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.