கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மே மாதத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. ஜியோ தவிர ஏர்டெல், வி மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதைத் தொடர்ந்து வி மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களும் மற்ற நிறுவன சேவைக்கு மாறி இருக்கின்றனர். ஜியோவின் மாதாந்திர வளர்ச்சி 0.83 சதவீதமாக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்திலும் ஜியோ மட்டுமே புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது.
மே 2021 வரையிலான காலக்கட்டத்தில் வயர்லெஸ் சந்தாதாரர் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்கு 36.15 சதவீதமாக இருக்கிறது. ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தற்போது 43.12 கோடியாக இருக்கிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் சுமார் 46 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதே போன்று வி நிறுவனம் சுமார் 42 லட்சம், பி.எஸ்.என்.எல். நிறுவனம் 8.8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இருநிறுவனங்கள் டெலிகாம் சந்தாதாரர்கள் பிரிவில் முறையே 23.59 சதவீதம் மற்றும் 9.89 சதவீதமும் பெற்றுள்ளன. இந்த விவரங்கள் டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.