நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஜூலை 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் வழிபாட்டு தலங்கள், கடற்கரை பூங்காக்கள், அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடற் பயிற்சி மற்றும் யோகா மையங்களில் 50 சதவீதம் பேர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைத்து சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்களுக்கு ஊரடங்கில் விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. சமூக அரசியல் மற்றும் பொழுதுபோக்குத் தொடர்பான கூட்டங்களுக்கு தடை. பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த வழிகாட்டுதல்களின் படி அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும். அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.