தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனீர் கடைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.