கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலம் எழுபது சதவீதம் தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் ரோடரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சைக்கிள் விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர், கொரோனா தொற்றை ஒழிக்க காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய மாநில அரசுகள் வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து நிச்சயம் தப்பிக்கலாம் என்று மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தினார்.