தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மே 24-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தில் இன்று நாள் முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கை காரணம் காட்டி காய்கறி சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் இரு மடங்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் ஆவதால் சென்னையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி 50 ரூபாய், உருளைக்கிழங்கு 30 ரூபாயிலிருந்து 60 ஆக உயர்ந்துள்ளது, கீரை கட்டுகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கத்தரிக்காய் 20 ரூபாயிலிருந்து 100 ரூபாய், முருங்கைக்காய் 30 ரூபாயிலிருந்து 150 ரூபாய், இஞ்சி 40 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் காய்கறிகள் வாங்குவதற்கு அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.