கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையாக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்புாடுகளில் பல்வேறு அதிரடி தளர்வுகளை தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதில் குறிப்பாக தினசரி அமலில் இருந்த இரவு ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை கடந்த வெள்ளிக்கிழமையில் (ஜனவரி28) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று வார கடைசி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் பிப்ரவரி 1 நாளையில் இருந்து நீக்கப்படுவதாகவும் அரசு அதிரடியாக அறிவித்தது.
அதுமட்டுமல்லாமல் நாளை முதல் 1- 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அதிரடி அறிவிப்புகள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டே ஊரடங்கில் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்தல் முடிவடைந்ததும் மீண்டும் ஊடரங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற தகவல் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில நாட்களாக வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் 2 டோஸ் தடுப்பூசி, மேலும் பூஸ்டர் டோஸ், பிறகும் லாக்டவுன் என்றால் எங்களின் வாழ்வாதாரம் என்னாவது…? பிள்ளைகளின் கல்வி எதிர்காலம்தான் என்னாவது…? என்ற மக்களின் கேள்வி அரசின் செவிகளுக்கு சத்தமாக கேட்டுள்ளது. வார கடைசி நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் வடிக்கும் கண்ணீரும் அரசின் கண்களுக்கு கொஞ்சம் தாமதமாக புலப்பட்டுள்ளது. இதற்கு மேலாக எந்த ஒரு கொரோனா அலையும் உச்சம் என்று ஒன்று இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரையிலும் கொரோனா 3-வது அலை ஜனவரி இறுதி வாரம் உச்சத்தை அடைந்து, பின் படிப்படியாக குறைய தொடங்கும் என்பதே ஐஐடி நிபுணர்கள், மருத்துவ வல்லுநர் குழுவின் கணிப்பு ஆகும்.
இந்த கணிப்பின்படி 3-வது அலை கடந்த 4 , 5 நாட்களுக்கு முன்புவரை உச்சத்தை அடைந்து பின் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இதுபோன்ற பல காரணிகளை கருத்தில் கொண்டே ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகளை திறக்கும் முடிவை அரசு எடுத்திருக்க வேண்டுமே தவிர, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை மட்டும் கருத்தில் இப்படியொரு முக்கிய முடிவை அரசு எடுத்திருக்க முடியாது என்பது பொதுமக்களின் ஒரு தரப்பு கருத்தாக இருக்கிறது.
கொரோனாவின் தாக்கம் உண்மையில் குறையாமலல் தேர்தலுக்காக இப்படியொரு முடிவை அரசு எடுத்து இருந்தால், அதன் விளைவாக தினசரி சராசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரம், 40 ஆயிரம் என்றுஅதிகரித்தால், அது அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி தந்துவிடும். கொரோனா தொடர்பாக அவப்பெயர் ஏற்படுவதை, அதுவும் தேர்தல் நேரத்தில் கெட்டப் பெயர் ஏற்படுவதை எந்த அரசுமே விரும்பாது என்பதே திமுக உடன்பிறப்புகளின் கருத்தாக இருக்கிறது…