தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் பேருந்துகளை இயக்கவும், தேநீர் கடைகள் திறக்கவும் அரசு அனுமதி அளிக்கவில்லை. உணவகங்களில் அனைவரும் அமர்ந்து சாப்பிட விதிக்கப்பட்ட தடைகள் தொடர்ந்து அமலில் இருக்கும். கோயில்கள் உட்பட வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை.