தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபடுவது குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு இன்று அல்லது நாளை ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடும் ஊரடங்கு பிறப்பித்தால் கடைகளை அடைக்க உத்தரவிடக் கூடாது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் விழிப்புடன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கிறார்களா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கடைகளை அடைப்பது வணிகர்களை பெரிதும் பாதிக்கும் என அவர் கூறியுள்ளார்.