தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்து ஜூலை 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ள நிலையில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பக்தர்கள் வழிபாட்டிற்காக இன்று முதல் காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பொது தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் . ரூ .100 / – ரூ .50 / – விரைவு தரிசன கட்டணசீட்டு பெறும் பக்தர்கள் தெற்கு கோபுர நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் . மேற்கு மற்றும் வடக்கு நுழைவு வாயில் வழியாக இத்திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும், பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயிலின் தெற்கு , கிழக்கு அம்மன் வாசலில் வெப்பநிலை பரிசோதனைக்குப்பின் அங்கு அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி ஸ்பிரேயர்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திய பின்பே திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் . 10 வயதிற்கு குறைவானவர்கள் , 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் , மற்றும் கர்ப்பிணி பெண்கள் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் .
அதேபோல் சளி , காய்ச்சல் , இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோயிலில் நடக்கும் காலபூஜைகள் மற்றும் அபிசேகங்களை காண பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். கோயில் வளகத்திற்குள் சமூக இடைவெளி பின்பற்றிட திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் குறியீடு செய்யப்பட்ட சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் தரிசனம் செய்திட வேண்டும். பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலில் எந்த ஒரு இடத்திலும் உட்கார அனுமதி கிடையாது . பக்தர்கள் திருக்கோயிலுக்குள் தேங்காய் , பழம் , கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது .
அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை . திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் வழக்கம்போல் நிர்வாகத்தின் மூலம் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேபோல ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது. அதேநேரத்தில் அங்கு உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.