கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை 5வது கட்ட நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதற்கான காரணமாக பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து தமிழக மருத்துவர் குழு தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. அதில், ஊரடங்கு அமல் படுத்துவதால் ஏற்படும் சமூகப் பொருளாதார விஷயங்களையும் அரசும், மக்களும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு ஒன்று மட்டுமே தீர்வல்ல. இதை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும், சுய கட்டுப்பாடும் மிக மிக அவசியம். மக்கள் சுயமாக சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது, தங்களையும் தங்களைச் சுற்றி இருக்கக் கூடிய வீடு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றையும் சுத்தமாக கட்டாயம் வைத்திருப்பது, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய உணவு முறைகளைக் கையாள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே கொரோனா பாதிப்பை முற்றிலும் தடுக்க முடியும் என்பதால், ஊராடங்கை மட்டுமே தீர்வாக கொண்டு செயல்பட முடியாது என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.