போக்குவரத்து சாலையில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டதிலுள்ள வளநாடு கிராமத்தில் இருக்கும் காசிம் நகரில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகின்றன. இந்த நகரில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காகவும் குடிநீர் தொட்டி வைப்பதற்காவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் காசிம் நகரில் ஆழ்குழாய் கிணற்றை ஏற்படுத்தாமல் அருகில் இருக்கும் சந்தைப்பேட்டை தெருவில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வளநாடு பகுதியிலுள்ள கடை வீதியில் கைகோர்த்து பாலக்குறிச்சி ரோட்டில் கருப்பு கொடிஏந்தி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது, சந்தைப்பேட்டை தெருவை போக்குவரத்து சாலையாக பயன்படுத்தி வருகிறோம் எனவே அந்தஇடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க கூடாது என தெரிவித்துள்ளனர் .
இதுகுறித்து தகவலறிந்த மருங்காபுரி ஒன்றிய குழு தலைவர் பழனியாண்டி, மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு வேறொரு இடம் தேர்வு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள்போராட்டத்தை கைவிட்டுஅங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.