சமையல் தொழிலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் தொழிலாளியாக அர்ஜூனன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி அர்ஜுனன் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நத்தம் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அர்ஜுனனிடம் பணம் இருப்பதை நோட்டமிட்ட வாலிபர் அவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து அர்ஜுனன் தகராறில் ஈடுபட்டதால் அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அர்ஜுனனின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்ததும் பொதுமக்கள் உடனடியாக அந்த வாலிபரை மடக்கி பிடித்து விட்டனர். இதற்கிடையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அர்ஜுனன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அர்ஜுனனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் அன்பரசன் என்பதும், பேருந்து நிலையங்களில் வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.