பெரம்பலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள அம்மன் நகர் பகுதியில் காமீல்பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிதாபானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காமீல்பாஷா வெளிநாட்டில் வேலை பார்த்து வருக்கிறார். இதனால் தனது குழந்தைகளுடன் பரிதாபானு மேட்டு தெருவில் உள்ள மாமனார் சையது முஸ்தாபா வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அரும்பாவூரில் உள்ள மகள் வீட்டிற்கு சையது முஸ்தாபா சென்றுவிட்டார். எளம்பலூர் சாலையில் ரெங்கா நகரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு பரிதாபானு சென்றுவிட்டார். அதன் பின் கடந்த 11-ஆம் தேதி காலையில் பரிதாபானு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று சோதித்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பரிதாபானு பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.