ஓட்டுனரின் கட்டுபாட்டை மீறி ஊருணியில் கார் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் அச்சம்பட்டியில் உள்ள முல்லைப் பெரியாறு கால்வாயில் தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அங்கு சென்று நீராடி வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று, மதுரையில் உள்ள செல்லூர் பகுதியில் வசிக்கும் ஐந்து இளைஞர்கள் ஒரு காரில் இந்த கால்வாய்க்கு வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் குளித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் வழியில், அச்சம்பட்டியில் உள்ள கூம்பூர் குண்டு ஊருணி பகுதியில் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனையடுத்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஊரணிக்குள் பாய்ந்துவிட்டது.
இந்த விபத்தில் அரவிந்த் குமார் மற்றும் சித்திக் ராஜா என்ற இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். அதன் பின் அதே காரில் பயணித்த வேல் பாண்டியன், வீரபாண்டி, முத்துப்பாண்டி ஆகிய மூவரையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஜேசிபி உதவியுடன் நீருக்குள் மூழ்கிய காரை மீட்டெடுத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.