கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊறுகாய் வியாபாரியான கார்த்திகேயன் என்பவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயனும், ராஜேந்திரனும் இணைந்து ஊறுகாய் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.