சுதந்திர போராட்டவீரர் தீரன் சின்னமலையின் 217-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க சார்பாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சர்க்காரியா கமிஷனால் குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்டவர்கள் தி.மு.க-வினர். விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வது தி.மு.க-வினருக்கு கைவந்த கலை ஆகும்.
குறிப்பாக பால்வளத் துறை அமைச்சர் நாசர், விஞ்ஞானப்பூர்வமாக தங்களது முன்னோர் வழியில் பால் பாக்கெட்டில் பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டிய பாலின் அளவைக் குறைத்து அதன் வாயிலாக ஆதாயம் தேடியுள்ளார். தமிழகம் முழுதும் நாளொன்றுக்கு 37 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. அதில் தினசரி 51/2 லட்சம் லிட்டரை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது. அந்த பூனைக் குட்டி குடித்த பாலின் விலையானது நாளொன்றுக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் ஆகும். ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் ஆகும். அரைலிட்டர் பால் பாக்கெட்டில் 75 கிராம் அளவுக்கு எடை குறைவாக இருக்கிறது. ஆவின்பால் பாக்கெட் எடை குறைந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நாட்டுமக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். துறைரீதியான விசாரணை என்பது எந்த வகையிலும் நியாயம் கிடைக்கச் செய்யாது” என்று கூறினார்.