தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் குறிப்பாக கவனிக்கப்பட்ட துறை லஞ்ச ஒழிப்பு துறை ஆகும். முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி சாதாரண அரசு ஊழியர்கள் வரை முறைகேடுகள் குறித்த புகார்களை விசாரிக்கும் அமைப்பு லஞ்ச ஒழிப்புத்துறை. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார், டெண்டர் முறைகேடு உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களை விசாரித்து தண்டனை வாங்கித் தரும் முக்கியத்துவத்தை லஞ்ச ஒழிப்புத்துறை ஆகும்.
இந்நிலையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஐஜியாக லட்சுமியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக பதவி வகித்த இவர் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அதன்பிறகு விருப்ப ஓய்வு கேட்டு அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.