நவாஸ் ஷெரீப்பின் தண்டனையை ரத்து அல்லது இடைநீக்கம் செய்வது பற்றி ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷெரீப், கடந்த 2017-ம் ஆண்டு பனாமா கேட் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அங்கு ஆட்சி பொறுப்புக்கு வந்த இம்ரான்கான் அரசு நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் வழக்குகளை பதிவு செய்து விசாரனை மேற்கொண்டது. இதில் ஒரு வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக 4 வாரம் ஜாமீன் பெற்று லண்டன் சென்றார். ஆனால் அதன் பின் இன்று வரை அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை.விசாரித்து தண்டனை வழங்க இம்ரான்கான் அரசு தீவிரமாக முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றார். அதை தொடர்ந்து, இந்த புதிய அரசு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்குத் திரும்புவதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் புதிய பாஸ்போர்ட்டை கடந்த மாதம் வழங்கியது.
அதன்படி நவாஸ் ஷெரீப் விரைவில் பாகிஸ்தான் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்பின் தண்டனையை ரத்து அல்லது இடைநீக்கம் செய்வது பற்றி ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தானின் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா கூறும்போது, “குற்றம் சாட்டப்பட்டவரின் தண்டனையை ரத்து செய்யவோ அல்லது இடைநிறுத்தவோ மத்திய அரசுக்கும், பஞ்சாப் மாகாண அரசுக்கும் அதிகாரம் இருக்கிறது. அதோடு முன்பு ‘தவறாக’ தண்டனை விதிக்கப்பட்டதற்காக கோர்ட்டில் மீண்டும் வழக்குத் தொடரவும் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம்” என கூறியுள்ளார்.