மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக 3 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டி பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சீலப்பாடியில் இருக்கும் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்புசாமி தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தி விட்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தார். வேலை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த கருப்புசாமி உடனடியாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நந்தவனப்பட்டி பாலம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் என்.எஸ் நகரில் வசிக்கும் பாலாஜி, பிரவீன் குமார் மற்றும் மோகன்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கருப்புசாமிக்கு சொந்தமானது என்பதும் உறுதியானது. இதனை அடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.