பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மலையாள நடிகரான ஃபகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். தெலுங்கில் ஊ அண்டவா மாவா என்றும் தமிழில் ஊ சொல்றியா மாமா என்றும் இடம்பெற்றது. இதேபோல் இந்திமலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் அந்தந்த மொழியில் வரிகள் இடம்பெற்றன.இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ் ஆனதுமே பெரும் சர்ச்சையில் சிக்கியது. ஆண்களை தவறதாக சித்தரிப்பதாக கூறி இந்தப் பாடலுக்கு எதிராக ஆந்திராவில் ஆண்கள் சங்கத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதேபோல் தமிழகம் மற்றும் கர்நாடகாவிலும் இப்பாடலுக்கு எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “ஒருவர் என்னிடம் ஏன் ஐட்டம் பாடலில் வேலை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு இது உங்களுக்குதான் ஐட்டம் பாடல், எனக்கு இது வெறும் பாடல் தான் என்று பதிலளித்தேன்.ஒரு இசைக்கலைஞரின் இசையமைப்பிலிருந்து, இயக்குனருக்கு என்ன தேவை, படத்திற்கு என்ன தேவையோ அதை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். காதல் பாடலாக இருந்தால் காதல் பாடலாகவும், ஐட்டம் பாடலாக இருந்தால் ஐட்டம் பாடலாகவும் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இது ஒரு பாடல், அதற்கு என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை, அது பக்தி, காதல் பாடலாக இருந்தாலும், இசையமைக்கும் செயல் ஒன்றுதான். இருப்பினும், இதை அரசியலாக்கியது தேவையில்லாதது” என அவர் தெரிவித்துள்ளார்.