“எஃப்ஐஆர்” திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இப்படத்தின் மூன்று நடிகைகளையும் ஒன்றுசேர்க்க முடியாதது வருத்தமளிப்பதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் தற்போது எஃப்ஐஆர் திரைப்படத்தில் அவரே தயாரித்து நடித்துள்ளார். இத்திரைப்படத்தை மனோ ஆனந்த் இயக்கியுள்ளார் மற்றும் அஸ்வத் இசையமைத்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், கௌதம் மேனன், கௌரவ் நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் சில சர்ச்சைகள் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றிருந்தனர். அப்போது பேசிய விஷ்ணு விஷால் “கொரோனா உள்ளிட்ட பல இடையூறுகளை சந்தித்து இத்திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சிக்குரியது. மேலும் இத்திரைப்படத்தில் நடித்த 3 கதாநாயகிகளையும் இந்நிகழ்வில் ஒன்றிணைக்க முடியவில்லை. இவர்கள் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகள் தான். இருந்தபோதிலும் என்னால் இவர்களை சேர்க்க முடியவில்லை. இதனால் ஒரு தயாரிப்பாளராக நான் தோற்றுப்போய் உள்ளேன்” என தன் வேதனையை பதிவு செய்தார்.